வாகன பதிவு எண் இன்றி சுற்றும் பைக்குகளை கட்டுப்படுத்தணும்!
பொள்ளாச்சி, ; வாகன பதிவு எண் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களைக் கண்டறிந்து, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், இயக்கப்படும் பெரும்பாலான, இரு சக்கர வாகனங்களில், போக்குவரத்து விதிமுறைபடி, வாகன பதிவு எண்கள் எழுதப்பட்டுள்ளது.ஆனால், சிலர், தங்களது வாகனங்களில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் வாகன பதிவு எண்களை எழுதி உள்ளனர். சிலர், வாகன பதிவு எண் எழுதாமல், நம்பர் பிளேட்டில், தங்களுக்கு பிடித்த வாசகங்கள், குழந்தைகள், நடிகர்களின் பெயர்கள் உள்ளிட்டவைகளை எழுதி வலம் வருகின்றனர்.இந்நிலையில், வாகன பதிவு எண் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களைக் கண்டறிந்து, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:சிலர், தங்களது வாகன நம்பர் பிளேட்டில், அரசு விதிப்படி, போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு, எண்களை எழுதாமல் உள்ளனர். பெரும்பாலும் கிராமச் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் இத்தகைய இரு சக்கர வாகனங்களை, 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் இயக்குகின்றனர்.குறிப்பாக, அதிக சப்தம் எழுப்பும் ஹாரன் பொருத்தி, சைலன்சரை மாற்றி அமைத்து, அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். துறை ரீதியான அதிகாரிகள் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.