கோவை;அரசுப்பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்களின் விபரங்களை, தமிழ்நாடு பள்ளிக்கல்வி செயலியில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த கல்வி மூலம், அரசுப்பள்ளிகளுக்கு, பராமரிப்பு செலவினங்களுக்கு நிதி வழங்குவதோடு கூடுதல் வகுப்பறை, கழிவறை, சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.இதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துதல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ஒவ்வொரு திட்டத்தின் கீழ், அடுத்த கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதற்கான செலவினங்கள் பட்டியலிட்டு, மத்திய அரசுக்கு அனுப்புவது வழக்கம்.இதன்படி, பழுதடைந்த கட்டடங்களை வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு பின் இடித்து, புதிய கட்டடங்கள் கட்ட ஆகும் செலவினங்களை பட்டியலிடும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி செயலியில் விபரங்கள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒருங்கிணைந்த கல்வி சார்பில், இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் உறுதித்தன்மை, ஆயுட்காலம் ஆகியவை வல்லுநர் குழு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். கல்வி அதிகாரிகளும், ஆய்வில் ஈடுபடுவர். இடிக்கத்தக்க கட்டடங்களை முழுமையாக அப்புறப்படுத்துதல், பராமரிப்பு பணிகளுக்கு பின் மறுபயன்பாட்டுக்கு தகுந்த கட்டடங்களை கண்டறியும் வகையில், விபரங்கள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டு இறுதிக்குள், பழைய கட்டடங்கள் இடித்து, புதிய வகுப்பறை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படும்' என்றனர்.