மேலும் செய்திகள்
நெடுஞ்சாலையில் 3 அடிக்கு பள்ளம்
14-Jun-2025
கோவை; கோவை மாநகராட்சி, 60வது வார்டு பெர்க்ஸ் பள்ளி சாலை உப்பிலிபாளையத்தில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவால், ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. கோவை நகர் பகுதியில், பாதாள சாக்கடை மற்றும், 24 மணி நேர குடிநீர் திட்ட குழாய் பதிக்க, ஆங்காங்கே ரோடு தோண்டப்படுகிறது. தோண்டும் இடங்களில் மண்ணை போட்டு சரிவர மூடுவதில்லை. வாகனங்கள் செல்லும்போது குழி ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் குழிக்குள் சிக்கிக் கொள்கின்றன.கிழக்கு மண்டலம், 60வது வார்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி செய்தபோது, பெர்க்ஸ் பள்ளி சாலை உப்பிலிபாளையம் அருகே, 24 மணி நேர குடிநீர் திட்ட குழாயை உடைத்து விட்டனர். அக்குழாய் சில நாட்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது; குழிக்குள் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது. புதியதாக பொருத்திய குழாயில், நேற்று குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அதில், உப்பிலிபாளையம் பகுதியில் கசிவு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறியது. மண் இளகி, ரோட்டில் பெரிய அளவில் பள்ளம் உருவானது.மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் வாகனம் வாயிலாக, குழி தோண்டிய போது, குழாயில் இருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. 50 மீட்டர் நீளத்துக்கு ரோட்டில் மண் இறங்கியது. இதையடுத்து, குழாய் கசிவு சரி செய்யும் பணி துவக்கப்பட்டது. இப்பகுதியில் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளை, பெற்றோர் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வருகின்றனர். ரோடு படுமோசமாக இருப்பதால் மிகவும் கஷ்டப்படுகின்றனர். குழி தோண்டிய மண் சேறும், சகதியுமாக இருப்பதால் தடுமாற்றம் அடைகின்றனர். மழைக்காலமாக இருப்பதால், ரோடு தோண்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும். தோண்டியுள்ள ரோட்டை தரமாக சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-Jun-2025