உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்ம் டூ ஹோம் வாகனம் எப்போது வரும்... எந்த பகுதிக்கு வரும்? விபரம் வெளியிட்டால் நல்லா இருக்கும்

பார்ம் டூ ஹோம் வாகனம் எப்போது வரும்... எந்த பகுதிக்கு வரும்? விபரம் வெளியிட்டால் நல்லா இருக்கும்

கோவை: கோவை உழவர் சந்தை விலை நிலவரங்களை, தினந்தோறும் வெளியிடுவதை போன்று, ' பார்ம் டூ ஹோம்' திட்டத்தில் வழங்கப்பட்ட, நடமாடும் காய்கறி வாகனங்கள் தினந்தோறும் செல்லும் இடங்களையும், அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கோவையில், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லுார், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், குறிச்சி, சுந்தராபுரம், சூலுார், வடவள்ளி ஆகிய எட்டு இடங்களில், உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. எட்டு சந்தைகளிலும் சேர்த்து, 634 பேர் கடைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு, 180 டன் காய்கறி விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை கட்டுப்பாட்டில் 4 வாகனங்களும், வடவள்ளி, சிங்காநல்லுார் உழவர்சந்தை கட்டுப்பாட்டில் ஒன்று வீதமும், ஆறு வாகனங்கள் மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்களில், நேரடியாக தோட்டத்தில் இருந்து விவசாயிகள் காய்கறி, பழங்களை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்கும் வகையில், திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இவ்வாகனங்கள் தினந்தோறும், எப்பகுதிகளுக்கு செல்கிறது என்பது குறித்து தகவல்கள் வெளியிட்டால் மட்டுமே, பொதுமக்கள் பயன்பெற முடியும்.ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷாம் ராவேல் கூறுகையில், ''கோவையின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நான்கு பிரிவுகளில், இவ்வாகனங்கள் செல்லும். இது உழவர் சந்தைக்கு சொந்தமான வாகனம் இல்லை; விவசாயிகளுக்கு சொந்தமானது. இருப்பினும், அதன் வாயிலாக, விற்பனை செய்யப்படும் காய்கறி, எங்கு செல்கிறது என்ற அறிக்கையை, விவசாயிகளிடம் இருந்து பெற்று வருகிறோம்,'' என்றார். சமூக ஆர்வலர் உஷா கூறுகையில், ''ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் தினசரி விலை நிலவரங்கள் சமூகவலைதளங்களில் 'அப்டேட்' செய்யப்படுவதால், காய்கறி, பழங்கள் வாங்குவதற்கு எளிதாக திட்டமிட முடிகிறது. ஆனால், நடமாடும் வாகனங்கள் எங்கு செல்கின்றன என்பது தெரிவதில்லை. அதனையும், வாகனங்கள் ஒவ்வொரு நாளும் செல்லும் பகுதிகள், என்னென்ன காய்கறி உள்ளன, தொடர்பு எண் போன்ற தகவலும் கொடுத்தால், இத்திட்டம் செயல்படுத்தியதன் நோக்கம் முழுமையாக நிறைவேறும். இது போன்ற வாகனங்களை, உழவர் சந்தையின் பொறுப்பில், நேரடியாக இயக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை