| ADDED : ஜன 01, 2024 11:33 PM
கோவை:சாக்கடை அடைப்பை நீக்கும் 'ரோபோடிக்' இயந்திரங்களை, மண்டலம் தோறும் வழங்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை பணிகள் குறிப்பாக மேற்கு, தெற்கு, கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அதிகம் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த இடங்களில், பாதாள சாக்கடை அடைப்பு என்பது, பிரதான பிரச்னையாக உள்ளது.பாதாள சாக்கடை குழாய்களை, 'சேம்பர்' உடன் இணைக்கும் போது, சரியாக பூச்சு பூசப்படாததால் அடைப்பு ஏற்பட்டு வருகிறது. அடைப்பு நீக்கும் பணியில், ஆட்களை பயன்படுத்தக்கூடாது என்பதால் இதற்கென, ஐந்து 'ரோபோடிக்' இயந்திரங்கள், மாநகராட்சிக்கு வாங்கப்பட்டன.ஆனால், இதுவரை அவை களத்துக்கு கொண்டு வரப்படாததால், கவுன்சிலர்களிடம் பலவித சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. மண்டலம் மற்றும் மாமன்ற கூட்டங்களில், 'ரோபோடிக்' இயந்திரங்கள் எங்கே என்ற கேள்விகளையும், கவுன்சிலர்கள் முன்வைத்து வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சாக்கடை அடைப்பு பாதிப்புகளை சரிசெய்ய, வாங்கப்பட்ட 'ஜென் ரோபோடிக்' இயந்திரங்களை பராமரிக்க வேண்டியுள்ளது. அவை சரி செய்யப்பட்டு, மண்டலத்துக்கு ஒன்று வழங்கப்படும்' என்றனர்.