காட்டு பன்றிகளால் வாழைகள் சேதம்; போகம்பட்டியில் வனத்துறை ஆய்வு
சூலுார்; போகம்பட்டியில் காட்டுபன்றிகளால் சேதமடைந்த வாழைகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.சுல்தான்பேட்டை அடுத்த போகம்பட்டி, இடையர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. விளைநிலங்களில் புகுந்து மக்காச்சோளம், கீரைகள், பீட்ரூட், வாழைகளை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, போகம்பட்டியில் வாழைத்தோப்பில் புகுந்து, ஏராளமான வாழை களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தோட்டத்தில் ஆய்வு செய்தனர். விவசாயிகள் கூறுகையில், 'சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து காய்கறி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால், பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.