| ADDED : நவ 18, 2025 03:36 AM
பொள்ளாச்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாணவர்களின் புகைப்படத்துடன் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், பொற்றோரின் மொபைல்போன் எண், பள்ளி முகவரி உள்ளிட்ட விபரங்களுடன் அடையாள அட்டை இடம்பெற்றுள்ளது. தனியார் பள்ளிகளில் இந்நடைமுறை பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. அரசு பள்ளியில் அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. சீருடையில் இருந்தால் மட்டுமே, அம்மாணவன் அரசு பள்ளி மாணவன் என, அடையாளம் காண முடிகிறது. எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: அடையாள அட்டை வழங்கப்படுவதன் வாயிலாக, பொது இடங்களில், மாணவர் பற்றிய விபரங்களை மற்றவர் எளிதில் அறிய முடியும். இதற்கு, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகை செலவிட வேண்டும். பாடபுத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்குவதுபோல, அடையாள அட்டை வழங்கவும் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் விபரங்களை, 'எமிஸ்' தளம் வாயிலாக எளிதாக பெறவும் முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.