விளம்பர பலகை விதிமீறல் அதிகரிப்பு நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் அனுமதியின்றி சிறிய அளவிலான விளம்பர பலகை வைக்கப்படுவது, அதிகரித்து வருகிறது. சாலை சந்திப்புகள், பொதுமக்கள் கூடுமிடங்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கவனத்தை சிதறடிக்கும் வகையிலோ அல்லது விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலோ, விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என, ஐகோர்ட் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறது.அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற, கலெக்டர் தலைமையில் போலீஸ், வருவாய் துறையினர், இதுதொடர்பாக ஆலோசித்து செயல்திட்டம் வகுக்க வேண்டும்.விளம்பர பலகைகளை அகற்றுவதோடு, இரும்பு கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பொள்ளாச்சி நகராட்சி, சுற்றுப்பகுதி உள்ளாட்சி பகுதிகளில், இந்த உத்தரவுகள் மீறப்பட்டு வருகின்றன.வீட்டுமனை விற்பனை, வணிக் கடைகள் குறித்த சிறிய அளவிலான விளம்பர பலகைகளை, ரோட்டோரத்திலும், குறுகிய ரோடு, நான்கு ரோடு சந்திப்பு பகுதிகளில் வைக்கின்றனர்.அனுமதி இன்றி, வழிநெடுகிலும் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து, குழி தோண்டி, இரும்பு குழாய் அமைத்து, விளம்பர பலகைகளை அமைத்துச் செல்கின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது:பெரிய அளவிலான விளம்பர பலகை வைத்தால்தானே பிரச்னை எழும் என்பதை அறிந்த சிலர், அதற்கு மாற்றாக யோசித்து செயல்படுகின்றனர். வீட்டுமனை விற்பனை செய்வோர், ரோட்டோரத்திலுள்ள மரங்களிலும், வீடுகளின் நுழைவாயில் கேட்களிலும் விளம்பரங்களை கட்டி வைக்கின்றனர்.இதனால், திரும்பிய பக்கமெல்லாம், சிறிய அளவிலான விளம்பர பதாகைகள் தென்படுகின்றன. அரசு விதிகளை மீறி வைக்கப்படும் விளம்பர பலகைகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். விளம்பரம் செய்துள்ளோம் மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.