தக்க நேர பரிசோதனையால் சர்க்கரை பாதிப்பை கட்டுக்குள் வைப்பது சுலபமே!
கோவை: ‘‘இந்தியாவில் 8.98 கோடி பேருக்கு சர்க்கரை பாதிப்பு உள்ளது. இதில், 43 சதவீதம் பேர், சர்க்கரை பாதிப்பு இருப்பது தெரியாமலே உள்ளனர்’’ என்கின்றனர் கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி மற்றும் நீரிழிவு நோய் மருத்துவர்கள் சிவஞானம் மற்றும் சங்கர் ஆகியோர். சர்க்கரை குறைபாடு பிரச்னை பற்றி இவர்களிடம் விலாவாரியாக பேசினோம். சர்க்கரை பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் குளூக்கோஸ் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இந்த குளூக்கோஸை உடல் செல்கள் பயன்படுத்துவதற்கு, கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் உதவுகிறது. இன்சுலின் போதுமான அளவு சுரக்காத போதோ அல்லது சுரக்கும் இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்த முடியாத போதோ, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதைத்தான் சர்க்கரை பாதிப்பு என்கிறோம். சர்க்கரை பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன? பரம்பரை காரணிகள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, அதிக கலோரி கொண்ட உணவு உட்கொள்வது, சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் குடிப்பது, மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை முக்கிய காரணிகள். குடும்பத்தில் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களுக்கு சர்க்கரை பாதிப்பு இருந்தால் பிறருக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகம். * சர்க்கரையை கட்டுப்படுத்தாவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? நீண்டகாலமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படலாம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படலாம். சிறுநீரகச் செயலிழப்பு, பார்வைக் குறைபாடு, கை, கால்களில் உணர்வு குறைபாடு ஏற்படலாம். கால்களில் காயங்கள் ஏற்பட்டு ஆறாமல் போகலாம். * டைப் 2 சர்க்கரையை வராமல் தடுக்க முடியுமா? டைப் 2 சர்க்கரை நோயை தடுக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும். உடல் எடையை சரியான அளவில் பராமரித்தல், காய்கறி, கீரைகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுதல், புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக உணவுக்குப் பிறகு 10 நிமிடங்கள் மெதுவாக நடப்பது உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்த உதவும். உடல்நிலைக்கு ஏற்ப உடற்பயிற்சியைத் தேர்வு செய்வது அவசியம். மருந்து, வாழ்வியல் முறை, நல்ல துாக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது ஆகியவையே சர்க்கரை பாதிப்பை இயல்பு நிலைக்கு திருப்பும் மந்திரங்கள். கர்ப்பிணிகள் கவனிக்கணும்; பிரசவத்தில் சிக்கல் வரலாம்கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக நஞ்சுக்கொடி எனப்படும் பிளாசென்டாவிலிருந்து Human Placental Lactogen, Progesterone, Cortisol மற்றும் Placental Growth Hormone போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.இந்த ஹார்மோன்கள் கர்ப்பத்தின் 2–3 வது மாதங்களில் இன்சுலின் செயல்பாட்டைக் குறைக்கின்றன. இதனால் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. இந்த மாற்றத்தைச் சமாளிக்க கணையம் வழக்கத்தைவிட அதிக இன்சுலினைச் சுரக்க வேண்டும். தேவையான அளவு இன்சுலின் சுரக்காதபோது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து கர்ப்பகால சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது.கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்புகள், பிறவிக் குறைபாடுகள் ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பகால சர்க்கரை பாதிப்பின் வெளிப்படையான அறிகுறிகள் இருக்காது. எனவே, அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பரிசோதித்து கொள்வது அவசியம்.ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம், கருவை சுற்றியுள்ள நீர் அதிகரித்தல், பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படலாம்.தாயின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது குழந்தைக்கும் அதிக அளவு குளூக்கோஸ் சென்றடைகிறது. இதனால் குழந்தையின் கணையம் அதிக இன்சுலினைச் சுரக்கத் தொடங்குகிறது.பிறக்கும் குழந்தையின் எடை அளவுக்கு அதிகமாக இருக்கலாம். இதனால் பிரசவத்தின்போது குழந்தைக்கு காயம் ஏற்படவும், தோள்பட்டை சிக்கிக்கொள்வது (Shoulder Dystocia) போன்ற பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. குறைப்பிரசவம், பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்னைகள் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவு குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?
அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப் பசி, உடல் சோர்வு, காரணமின்றி உடல் எடை குறைதல் போன்றவை பொதுவான அறிகுறிகள். சிலருக்கு காயங்கள் ஆற அதிக நாட்கள் ஆகலாம். பலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே சர்க்கரை பாதிப்பு இருக்கலாம். எனவே, அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காமல் உரிய கால இடைவெளியில் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். 30 வயதைக் கடந்தவர்கள், குடும்பத்தில் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடற்பயிற்சியின்றி ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை பாதிப்பு எத்தனை வகைகள்? என்ன வித்தியாசம்?* டைப் 1: உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, கணையத்தில் இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களை அழிப்பதால், இன்சுலின் உற்பத்தி மிகவும் குறைகிறது அல்லது முற்றிலும் நின்றுவிடுகிறது. இது உணவுப் பழக்கம் அல்லது வாழ்க்கை முறையால் ஏற்படுவதல்ல. இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் சிகிச்சை தேவைப்படலாம்.* டைப் 2: 90 சதவீத சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள். உடல் இன்சுலினுக்குச் சரியாக பதிலளிக்காத நிலை ஏற்படுவதுடன், நாளடைவில் இன்சுலின் சுரப்பும் குறைகிறது. பரம்பரை, உடல் உழைப்பின்மை, உடல் பருமன் மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணிகள்.* கர்ப்பகால சர்க்கரை நோய்: கர்ப்ப காலத்தில் முதன்முதலாக கண்டறியப்படும் சர்க்கரை பாதிப்பு, பிரசவத்திற்கு பிறகு பலருக்கு இயல்பு நிலைக்கு திரும்பலாம். ஆனால், எதிர்காலத்தில் டைப் 2 சர்க்கரை பாதிப்பு ஏற்படலாம் என்பதால், தொடர் பரிசோதனை அவசியம்.