13 சவரன் நகை திருடிய பெண் கைது
கோவை; கோவை, தொப்பம்பட்டி பிரிவு, கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரியா,47. இவரது சகோதரியின் மாமியார் ஞானேஸ்வரி,65, நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பே நகரில் தனியாக வசிக்கிறார். இவரை கவனித்துக் கொள்ள, 'ஸ்டேண்டர்டு மெய்டு' என்ற ஆன்லைன் வாயிலாக, பெண் உதவியாளரை வேலைக்கு அனுப்ப கேட்டுக்கொண்டார். அந்நிறுவனத்தினர், டாடாபாத், அழகப்பா செட்டியார் ரோட்டை சேர்ந்த சாந்தி,55, என்பவரை பணிக்கு அனுப்பினர். ஆக., 6 முதல், வேலைக்குச் சேர்ந்த சாந்தி, அங்கேயே தங்கியிருந்தார். ஞானேஸ்வரி, பீரோவை தற்செயலாக திறந்து பார்த்தபோது, 13 சவரன் தங்க நகை மற்றும் 30,000 ரூபாய் காணவில்லை. அவர், பிரியாவுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக, துடியலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பணிப்பெண் சாந்தியிடம் விசாரித்தபோது, நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. சாந்தியை கைது செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை மீட்டனர்.