பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் ரவுண்டானாக்கள், மைய தடுப்புகள் அழகுப்படுத்தும் பணி தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று பூமி பூஜையுடன் துவங்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், ரவுண்டானா அழகுப்படுத்துதல் குறித்து தொழில்வர்த்தக சபை மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து, முதற்கட்டமாக இரண்டு ரவுண்டானாக்கள் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார்.துணை தலைவர் கவுதமன், நகராட்சி கமிஷனர் குமரன், நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன், வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர் செந்தில்குமார் பங்கேற்றனர். நகராட்சி தலைவர் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சி, 1920ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1983ம் ஆண்டு முதல் சிறப்பு நிலையாக செயல்படுகிறது. கேரளா மாநிலத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பொள்ளாச்சி உள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நகராட்சி பகுதிகளில் உள்ள எட்டு ரவுண்டானாக்கள், ஆறு மைய தடுப்புகள் அழகுப்படுத்துதல் பணி சி.எஸ்.ஆர். நிதி வாயிலாக செய்யப்பட உள்ளது. உடுமலை தேர்நிலையம் ரோட்டில் யானை, மரப்பேட்டை பள்ளி அருகே மயில், காந்திசிலை அருகே ரேக்ளா போன்றவை அமைக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே தென்னை மரங்கள், மாட்டு சந்தை ரவுண்டானாவில், மாடு சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. மற்ற ரவுண்டானாக்களில், பூங்கா, லைட்டிங் அமைத்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இரண்டு ரவுண்டானாக்கள், சி.எஸ்.ஆர். நிதியில் பணி மேற்கொள்ளப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரவுண்டானாவில் தென்னை விவசாயம் சார்ந்த சிலை வைக்கப்பட உள்ளது. இப்பணி, 25 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு மாதத்தில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்ற ரவுண்டானாக்கள், மைய தடுப்புகள் அழகுப்படுத்தப்படும். இவ்வாறு, கூறினார்.