உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.3.6 கோடியில் உயர்மட்ட பாலம் நபார்டு திட்டத்தில் பணிகள் துவக்கம்

ரூ.3.6 கோடியில் உயர்மட்ட பாலம் நபார்டு திட்டத்தில் பணிகள் துவக்கம்

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, நபார்டு திட்டத்தில், 3.6 கோடி ரூபாய் செலவில், உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கிராமங்களில் இருந்து நகரப்பகுதிக்கு வரும் சாலைகளில், ஓடைகள் குறுக்கிடுகின்றன. போக்குவரத்து வசதிக்காக ரோடுகளில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டு வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டது.தரை மட்ட பாலங்களில் மழை காலங்களில் மழைநீர் வெள்ளமாக ஓடுவதால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், போதிய பராமரிப்பின்றி பாலத்தின் பக்கவாட்டு சுவர்களும் பெயர்ந்து விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.வாகனங்களில் செல்வோர் கவனமின்றி சென்றால், ஓடையில் சரிந்து விழும் நிலை உள்ளது. இந்நிலையில், வாகன ஓட்டுநர்களின் வசதிக்காக கிராமங்களில் உள்ள தரை மட்ட பாலங்களை, உயர் மட்ட பாலமாக கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.ஆனைமலை சோமந்துறை சித்துார், ஜமீன் கோட்டாம்பட்டி என பல இடங்களில், உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.ஆர். பொன்னாபுரம் - வடுகபாளையம் ரோட்டில், தரைமட்ட பாலத்தை மாற்றி உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நபார்டு கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ், மூன்று கோடியே, 60 லட்சம் ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. அதில், 7.5 மீட்டருக்கு ரோடு அமைப்பதுடன், இருபுறம் நடைபாதை என மொத்தம், 10 மீட்டருக்கு பாலம் அமைக்கப்படுகிறது. தற்போது, பாலம் அமைப்பதற்காக தரை மட்ட பாலம் அகற்றப்பட்டுள்ளது. குழிகள் தோண்டப்பட்டு, பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் போது, மழை காலத்தில் கிராம சாலைகளில் போக்குவரத்து தடைபடுவது முற்றிலும் தவிர்க்கப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ