பளிச் ஆன ரயில்வே ஸ்டேஷன் துாய்மை இந்தியா திட்டத்தில் பணி
பொள்ளாச்சி : துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 'குப்பையில்லா இந்தியா' என்ற பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது.அவ்வகையில், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, துாய்மை இந்தியா திட்டம், இருவார விழாவாக கொண்டாடப்படுகிறது.இதில், சுற்றுப்புற துாய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ரயில்வே ஸ்டேஷன்கள், அலுவலகங்களை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.இதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் இதற்கான பணியை மேற்கொண்டனர்.அப்போது, ஆட்டோ நண்பர்கள் குழுவினரும் ஒன்றிணைந்து, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உள்ள குடிநீர் தொட்டி, பயணிகள் உட்காரும் இடம் உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.தவிர, பசுமை வளர்ப்பு பணியாக மரக்கன்றுகள் நடும் விழாவும் நடத்தப்படுகிறது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.