மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
தொண்டாமுத்தூர்; சென்னனூர், மேற்கு வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி, 59. இவர், அதே பகுதியில் உள்ள, ரங்கராஜ் என்பவரின் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தார். ரங்கராஜின், பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தோட்டத்தில் மின்வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் காலை, ஆறுச்சாமி வழக்கம் போல, ரங்கராஜன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, பழனிச்சாமி தோட்டத்தில் அமைத்து இருந்த, மின்வேலியில் சிக்கி, ஆறுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் மின்சார வாரியத்தினர் வருவதற்குள், மின்வேலி அகற்றப்பட்டிருந்தது. இதனால், பழனிச்சாமி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலி, சோலார் மின் வேலியா அல்லது தோட்டத்திற்கு வந்த மின் இணைப்பில் நேரடியாக இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து, போலீசார் மற்றும் மின்சார வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.