பாலம் கட்டினீங்களே... அணுகுசாலை போடலையா? விபத்து அச்சத்தில் பயணிக்கும் மக்கள்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி - கெங்கம்பாளையம் செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்ட உயர் மட்ட பாலத்தின் இருபுறமும் அணுகுசாலை முழுமையாக அமைக்காததால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி - கெங்கம்பாளையம் வழியாக பெத்தநாயக்கனுார், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்த ரோட்டில், பாலாறு குறுக்கிடுவதால், தரை மட்ட பாலம், வாகன ஓட்டுநர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில், பாலம் மூழ்கிவிடுவதால், வாகன போக்குவரத்து தடைபட்டது. மாற்று வழித்தடத்தில் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இவ்வழியாக செல்லும் மக்கள், பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டினால் பயனாக இருக்கும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஜமீன் கோட்டாம்பட்டி - கெங்கம்பாளையம் ரோட்டில் நபார்டு திட்டத்தில், 6.72 கோடி செலவில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் கடந்த, 2023 ல் நடந்தது. அதில், 8.5 மீ., உயரம், 148.8 மீ., நீளம் கொண்ட பாலம் கட்டும் பணிகள் கடந்தாண்டு, செப்., மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், பாலத்தில் மட்டும் சிமென்ட் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் ஏறும், இறங்கும் பகுதியில் அணுகுசாலை முழுமையாக அமைக்காததால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: மழை காலத்தில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், போக்குவரத்து தடைபட்டது. அதற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், பாலத்தின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கவில்லை. கற்கள் நிறைந்த பாதையாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. விவசாயிகள் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் போது, தடுமாறி விழுகின்றனர். விளைபொருட்களும் சேதமடைகின்றன. பாலப்பணிகள் முடிந்ததாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அணுகுசாலையை யார் அமைப்பார்கள் என்பது தெரியவில்லை. கரடு, முரடாக இருக்கும் பாதையை முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். இவ்வாறு, கூறினர்.