| ADDED : ஆக 10, 2024 05:49 AM
கடலுார்: கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'தமிழ்ப்புதல்வன்” திட்டத்தினை துவக்கிவைத்தனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை கோயம்புத்துார் மாவட்டத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார். கடலுார் மாவட்டத்தில் ,கடலுார் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அரங்கத்தில் நடந்த தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு 'டெபிட் கார்டு' அட்டைகளை வழங்கினர்.பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவிகளை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அங்கிகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 புதுமைப்பெண் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ஐயப்பன், சபா.ராஜேந்திரன் ராதாகிருஷ்ணன், சிந்தனைசெல்வன், எஸ்.பி.,ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அனு, மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.