உயர்மட்ட பாலத்தில் தடுப்பு கட்டை சேதம்; சேத்தியாத்தோப்பில் வாகன ஓட்டிகள் அச்சம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று புதிய பாலத்தின் தடுப்பு கட்டை இடிந்து பல மாதங்களாகியும் சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்கதை கடந்து வருகின்றனர்.சென்னை-கும்பகோணம் சாலையில், ராஜிவ் சிலை வளைவில் இருந்து வெள்ளாறு புதிய பாலம் ஏற்றத்தில் மேல்நிலைப்பள்ளி சாலைக்கான உயர்மட்ட பாலம் உள்ளது. பாலத்தின் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, வேலுார், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பஸ்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர்.கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சென்னையிலிருந்து நள்ளிரவில் கும்பகோணம் நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி சேதமானது. சேதமான தடுப்பு கட்டையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர்.இந்த சாலையில் உயரதிகாரிகள், அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்று வரும் நிலையில் தடுப்பு கட்டை இல்லாதது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சமும் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்துள்ள தடுப்பு கட்டையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.