ஊராட்சிகளில் கட்டடம் கட்ட இனி ஆன்-லைனில் அனுமதி அனுமதி பெறாத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட வரைபட அனுமதி இணையதளத்தில் மூலம் மட்டுமே பெற வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் 684 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் வீடு மற்றும் கட்டங்கள் கட்ட நேரடியாக அனுமதி பெற்றிருந்தால் செல்லாது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் 2022-2023ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் புதியதாக அமைக்கப்படும் மனைப் பிரிவுகளுக்கும், கட்டட வரைபட அனுமதிக்கும் நேரடியாக அனுமதி பெற்றிருப்பின் அவற்றை தற்போது முறைப்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட வரைபட அனுமதி இணையதளம் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். மேலும், 2500 சதுரடிக்குட்பட்ட கட்டட அனுமதி இணைய வழியில் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக்கொள்லாம்.தவறும் பட்சத்தில் அவ்வாறான வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கு வீட்டு வரி, சொத்து வரி சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட மாட்டாது. குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பின் அதனை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட மாட்டாது. மின் இணைப்பு பெற்றிருப்பின் அதனை துண்டிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.எவ்வித அடிப்படை வசதிகளும் உள்ளாட்சி அமைப்புகளால் செய்து தர இயலாது. அனுமதி பெறாத கட்டடங்களை அப்புறப்படுத்த உரிய அரசு விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே பொது மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இணையதளம் மூலம் மட்டுமே கட்டட வரைபட அனுமதி பெற்றிட ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.