கடலுார் : கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்த 70 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதையடுத்து, தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. சமீபத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்ற டேவின்சன் ஆசீர்வாதம், தமிழகம் முழுவதும் அதிரடி விசிட் செய்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 20ம் தேதி, விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுடன், கடலுாரில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கூட்டத்தை முடித்துக்கொண்டு, அன்று இரவு, 10:00 மணியளவில், புதுச்சேரி எல்லையான கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் நேரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டார்.கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பலர் போதையில் வந்தனர். ஆனால், கையில் சரக்கு ஏதும் கொண்டுவரவில்லை. சுமார் 2 மணி நேரம் நடந்த வாகன சோதனையில், மதுபாட்டில்கள் ஏதும் சிக்கவில்லை. ஏ.டி.ஜி.பி., நேரடியாக வாகன சோதனை நடத்தியதால், என்ன நடக்குமோ என, அங்கு பணியில் இருந்த போலீசார் முதல் அதிகாரிகள் வரையில் ஒருவித கலக்கத்துடன் காணப்பட்டனர்.ஏ.டி.ஜி.பி., சோதனை நடத்தியதால் மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டு, ஆங்காங்கே வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டது. கடலுார் அருகே புதுச்சேரி மாநிலத்தையொட்டிய போலீஸ் நிலையத்தில், இருட்டினாலே வாயில் கேட்டை அடைத்துவிட்டு, முடங்கிவிடுவர். ஆனால், ஏ.டி.ஜி.பி., வாகன சோதனையன்று, நள்ளிரவு வரையில் கண் விழித்து வாகன சோதனையில் ஈடுபட்டு, கடமை உணர்வை வெளிப்படுத்தினர்.