வரி கட்டாத தொழிலதிபர் வீட்டில் பில் கலெக்டர்கள் தர்ணா
பண்ருட்டி: பண்ருட்டியில் நகராட்சிபில் கலெக்டர்கள் வரிகட்டாதவர் வீடு முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதல்பண்ருட்டி சோமேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. பிரபல தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக பண்ருட்டி ராஜாஜி சாலையில் லாட்ஜ், திருமண கூடம், சென்னை சாலையில் திருமண மண்டபம் உள்ளன. இவர் கடந்த 3 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி கட்டவில்லையென நேற்று மதியம் 12:00 மணியளவில் நகராட்சி பில் கலெக்டர்கள் கார்த்திகேயன், அன்புராஜன், அப்துல் அஜீஸ், பாலாஜி உள்ளிட்ட ஊழியர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.பின், பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் வாய்க்கால் சிலாப் இடித்து அகற்றினர். பின், அவரது வீட்டு வாசலில் வரி கட்டாததை கண்டித்து பில் கலெக்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, வீடு, மண்டபம் உள்ளிட்டவைகளுக்கு சில ஆண்டுக்கான சொத்துவரியை சத்தியமூர்த்தி செலுத்தினார். இதையடுத்து, பில் கலெக்டர்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.