உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பலத்த பாதுகாப்புடன் கடலுார், சிதம்பரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கை

பலத்த பாதுகாப்புடன் கடலுார், சிதம்பரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கை

கடலுார்: கடலுார் மற்றும் சிதம்பரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.கடலுார் லோக்சபா தொகுதியில் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.கடந்த ஏப்., 19ம் தேதி நடந்த தேர்தலில் 10,25,298 ஓட்டுகள் பதிவாகின. தேர்தல் முடிந்து, ஓட்டு இயந்திரங்கள் கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.நேற்று காலை ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது.அதையொட்டி கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டுகள், காலை 5:30மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் அரசு கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 11,752 தபால் ஓட்டுகள் போடப்பட்டிருந்தது.காலை 7:00 மணி முதல் வேட்பாளர்கள் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்தனர்.மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே கல்லுாரிக்குள் போலீசார் அவர்களை அனுமதித்தனர். சரியாக காலை 8:00 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், தபால் ஓட்டு பெட்டிகள் திறக்கப்பட்டு எண்ணும் பணி துவங்கியது. அதனை தொடர்ந்து, 6 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைகள், மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.தொடர்ந்து, ஓட்டு எண்ணும் அறைகளுக்கு ஓட்டு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, எண்ணும் பணி தொடங்கப்பட்டது. மொத்தம் 21 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.ஒவ்வொரு சுற்று முடிவிலும், முடிவுகள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

சிதம்பரம்

சிதம்பரம் (தனி) தொகுதி ஓட்டு எண்ணிக்கை, அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடந்தது. காலை 7:50 மணியளவில் சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு எண்ணும் பணிகள் துவங்கியது. முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. குன்னம் தொகுதியில் 23 சுற்றுகளும், அரியலூரில் 22, ஜெயங்கொண்டம், புவனகிரி தலா 21, சிதம்பரம் 19, காட்டுமன்னார்கோவில் (தனி) 18 சுற்றுகள் எண்ணப்பட்டன.தொகுதியில் 336 அலுவலர்கள் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணிக்கையின்போது, துணை ராணுவ வீரர்கள் உட்பட 880 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை