உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வெர்ட் உள்வாங்கியது: விருத்தாசலத்தில் பரபரப்பு

கல்வெர்ட் உள்வாங்கியது: விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 136 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில், தரமின்றி கட்டப்பட்ட கல்வெர்ட் உள்வாங்கியது.கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இதில், கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்.,) சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது.ஆனால், விருத்தாசலம் வழியாக உளுந்துார்பேட்டை, விழுப்புரம், சென்னை மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே உள்ள 22 கி.மீ., துார நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமமடைந்தனர்.இதை தவிர்க்கும் வகையில், சென்னை - கன்னியாகுமரி தொழில்தட சாலை திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையை 136 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது.அதில், விருத்தாசலத்தில் பிரதான ஜங்ஷன் சாலையில், பாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே இருந்த பழைய கல்வெர்ட்டை அகற்றி, இருபுறமும் வாகனங்கள் செல்லும் வகையில் அலகப்படுத்தப்பட்டது. இந்த கல்வெர்ட் வழியாக கழிவுநீர் வழிந்தோடி, மணிமுக்தாற்றில் கலக்கிறது.இந்நிலையில், தரமின்றி கட்டப்பட்ட கல்வெர்ட்டின் ஒரு பகுதியில் உள்வாங்கியது. ராட்சத அளவிலான பள்ளத்தில், பாதசாரிகள் நடந்து சென்றால் கால்வாய் உள்ளே விழும் அபாயம் உள்ளது. மேலும், வாகனங்களின் டயர்கள் சிக்கி, ஓட்டுனர்கள் காயமடையும் அபாயமும் உள்ளது.எனவே, கல்வெர்ட்டில் உள்வாங்கிய பகுதியை உடனடியாக சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அதுபோல், 136 கோடி ரூபாயில் தரமின்றி சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்