| ADDED : மே 24, 2024 05:21 AM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் கிராமத்தில் நெற்பயிரில் நோய் தாக்குதல் காரணமாக நெல் உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் ஊராட்சியில் 550 ஏக்கரில் சொர்ணாவரி பட்டத்தில் விவசாயிகள் கடந்த மாதம் வெள்ளைகார், கோ 37 உள்ளிட்ட ரகம் நெல் பயிரிட்டுள்ளனர்.நடவு நட்டு ஒருமாதம் ஆன நிலையில் கடந்த ஒரு வாரமாக பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.நெற்கதிர்கள் வராமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதற்கு வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அதிகாரிகள் நோய் தாக்கிய நெற்பயிரை ஆய்வு செய்து, நோய் தாக்குதலில் இருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து விவசாயி காட்டுராஜா கூறுகையில், கடந்த ஒரு வாரமாக நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. செம்மை, மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. வேளாண் அதிகாரிகள் கிராமங்களில் வந்து ஆய்வு செய்து, நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.