| ADDED : ஜூன் 26, 2024 02:25 AM
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள், தனியார் போக்குவரத்துக்கழக பஸ்களுக்கு போட்டியாக இயக்குவதால் இழப்பை சந்திக்க வேண்டியிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் அமைச்சர்களிடம் புகார் தெரிவித்தனர்.கடலுார் மாவட்டத்தில் 240 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கடலுார் மாவட்ட பொதுமேலாளர், தனியார் பஸ்களுக்கு போட்டியாக பல ரூட்களில் பஸ்களை இயக்கி வருகிறார். அதிகளவு கலெக் ஷன் ஆகும் ரூட்களில் சிறப்பு பஸ் என்ற போர்வையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ் இயக்கப்படுகிறது. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்படுவதாக புலம்புகின்றனர். அத்துடன் தனியார் பஸ்களில் பயிற்சி கொடுத்து தயார்படுத்தி வைத்துள்ள பஸ் தொழிலாளர்களை, போக்குவரத்துக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு ஆள் அமர்த்தி அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தினாலேயே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ் ஆப்ரேட்டர்களுக்கு, பஸ் தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் வருவாய் இழப்பினால் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதனால் வேறுவழியின்றி தங்கள் குறைகளை உள்ளூர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் தேசிங்குராஜன், செயலாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.