| ADDED : ஜூன் 15, 2024 05:37 AM
கிள்ளை: கிள்ளை இருளர் பழங்குடினர் மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கும் வகையில், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று, கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.கிள்ளை கலைஞர் நகர், தளபதி நகர், எம்.ஜி.ஆர்., சிசில் நகர், கிரீடு நகர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள், கலைஞர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.இதனால், மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கும் வகையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்க்க, கிள்ளை சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் ரவிந்திரன் ஆகியோர் முயற்சியால் மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று சேர்க்கப்பட்டனர்.நிகழ்ச்சியில், கிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பவானி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா, ஆசிரியர் மணிமாறன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.