UPDATED : மார் 22, 2024 12:43 PM | ADDED : மார் 22, 2024 12:43 AM
நெல்லிக்குப்பம்: வெயில் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், நெல்லிக் குப்பத்தில் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுவது அதிகரித்துள்ளது.கோடை வெயில், கோடையின் ஆரம்பத்திலேயே சுட்டெரிக்க துவங்கியுள்ளது. இதனால், மக்கள் வெளியில் தலைகாட்டுவதற்கு அச்சப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், குளிர்ச்சியான ரத்த ஓட்டம் உள்ள பாம்புகள், குளிர்ச்சியான இடம் தேடி படையெடுக்கின்றன. அந்த வகையில், கடலுார் மாவட்டம் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுவது அதிகரித்துள்ளது.நெல்லிக்குப்பம் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் கலால் போலீஸ் அலுவலகம், காமராஜர் நகர் கார் மெக்கானிக் கடை, நடுவீரப்பட்டு பைக் உதிரி பாகங்கள் கடை, பூங்குணத்தில் ஒரு வீட்டின் பிரிட்ஜ் ஆகியவற்றில் பாம்புகள் புகுந்து பிடிக்கப்பட்டுள்ளது.பாம்பு பிடிக்கும் ஆர்வலர் வரக்கால்பட்டு கிருபாகரன், நெல்லிக்குப்பம் உமர்அலி ஆகியோர் அந்த பாம்புகளை பிடித்து சென்று காப்பு காட்டில் விட்டனர். பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, தீயணைப்பு துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.