விருத்தாசலம்: மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் வளாகத்தில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மான்களை, வனப்பகுதியில் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா வெகுவிமர்சையாக நடக்கும். மேலும், வசந்த உற்சவம், சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை உள்ளிட்ட தினங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும்.மேலும், இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை வேண்டி பிராது கட்டினால் 90 நாட்களுக்குள் வேண்டுதல் நிறைவடையும் என்பது ஐதீகம். இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தினசரி இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.மேலும், இந்த கோவில் வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மான், மயில் உள்ளிட்டவைகளை பக்தர்கள் மற்றும் குழந்தைகள் பார்த்து ரசித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், அவைகளுக்கு பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளை வாங்கி அவைகளுக்கு கொடுத்து மகிழ்வர்.கடந்த 1986ம் ஆண்டில் இருந்து மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குள் கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. துவக்க காலத்தில் 2 மான், 2 மயில்கள் மட்டுமே இருந்தன. நாளடைவில் 22 மான்கள், 4 மயில்களாக பெருகி இருந்தது. ஆனால் இவற்றை பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக பல மான்கள் இறந்துவிட்டன. தற்போது 10 மான்கள், ஒரு மயில் மட்டுமே உள்ளது. இந்நிலையில், மான்களை பராமரிப்பது, மத்திய வன உயிரின ஆணையம் அனுமதி இல்லாமல் கூண்டில் அடைத்து வளர்த்து வந்ததால் ஏற்பட்ட சட்ட சிக்கலின் காரணமாக, மயில் மற்றும் மான்களை பாதுகாக்கப்பட்ட வனக்காடுகளில் கொண்டு சென்று விடுவதற்கு, விருத்தாசலம் வனத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதற்காக, நேற்று தலைமை வனப்பாதுகாப்பு அலுவலர் விழுப்புரம் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் குருசாமி, மருத்துவர் வேல்முருகன், வனச்சரக அலுவலர் ரகுவரன், உதவி வன பாதுகாப்பு அலுவலர் குமார் சங்கர் கொண்ட குழுவினர் கோவிலுக்கு சென்று கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மான்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது மான்களுக்கு நோய் தாக்குதல் உள்ளதா என அவற்றின் ரத்த மாதிரிகளை எடுத்து கால்நடை துறையினர் பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர். சோதனைகள் அனைத்தும் தலைவாசலில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆய்வு செய்த பின், மான்களுக்கு எந்த வித நோயும் இல்லை என்பது உறுதியானால் மான்கள் பாதுகாக்கப்பட்ட வனகாடுகளில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில், பல ஆண்டுகளாக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மயிலை வனத்துறை அதிகாரிகள் விடுவித்து வெளியேற்றினர். ஆனால் அந்த மயில் வேறு எங்கும் செல்லாமல் கோவில் வளாகத்திலேயே சுற்றி சுற்றி வந்தது. அதைத்தொடர்ந்து, மயிலை கூண்டில் மட்டும் அடைக்கக் கூடாது திறந்தவெளியில் திரியலாம் என கூறி அதிகாரிகள் அங்கேயே விட்டனர்.கடந்த 38 ஆண்டுகளாக கொளஞ்சியப்பர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த மயில் மற்றும் மான்களை வெளியேற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.