| ADDED : மே 28, 2024 05:03 AM
விருத்தாசலம், : முதனை கோவில்களுக்கு வரும் ஜூன் 12ம் தேதி கும்பாபிேஷகம் நடத்துவது என, அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.விருத்தாசலம் அடுத்த முதனையில், செம்புலிங்க அய்யனார் மற்றும் முதுகுன்றீஸ்வர் கோவில்கள் உள்ளது. இக்கோவில்கள் கும்பாபிேஷகம் நடத்துவது தொடர்பாக, அப்பகுதியினரிடையே பிரச்னை இருந்தது. இது தொடர்பாக தாசில்தார் உதயகுமார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. கோவில் செயல் அலுவலர் மாலா, ஊமங்கலம் இன்ஸ்பெக்டர் பிருந்தா, முதனை கிராம முக்கியஸ்தர்கள் கோவிந்தன், அருண், ஜோதிமணிகண்டன், ராஜகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், வரும் ஜூன் 12ம் தேதி செம்புலிங்க அய்யனார் மற்றும் முதுகுன்றீஸ்வரர் கோவில்களுக்கு கிராம மக்கள் ஒற்றுமையாக இருந்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். கும்பாபிேஷகத்திற்கு பிறகு அறநிலையத்துறையால் மட்டுமே கணக்குகள் பராமரிக்கப்படும். தனியார் யாரும் கணக்கு பராமரிக்க கூடாது. இந்து சமய அறநிலையத்துறை அச்சடிக்கும் அழைப்பிதழ்கள் மட்டுமே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.அரசு விதிகளின்படி கல்வெட்டுகள் வைக்கவும், தனிநபர் பெயரில் வைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், மண்டல அபிேஷகம் யாருக்கு ஒதுக்கீடு செய்வது என கும்பாபிேஷகம் அன்று மாலை பொது மக்கள் முன்னிலையில் தீர்மானிக்கப்படும். கும்பாபிேஷக விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறையினரால் கூடுதலாக சிறப்பு அலுவலர் நியமனம் செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.