| ADDED : ஜூன் 26, 2024 01:59 AM
மாசிமக பிரம்மோற்சவத்திற்கு பெயர்போன தாலுகாவில், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம், வருவாய்த்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய கோப்புகளை பாதுகாக்காமல் எடைக்கு போடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்தது. அதற்காக, கரன்சிகளும் கைமாறின. புகாரின்பேரில் பழைய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட, சமீபகாலமாக பிரச்னை ஏதுமின்றி பயனாளிகளும், அலுவலர்களும் நிம்மதியாக வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது பணியில் உள்ள தாசில்தாரை இடமாற்றம் செய்து, அந்த இடத்தில் ஏற்கனவே பணிபுரிந்த அதிகாரிகள் ஒரு சிலர் மீண்டும் வருவதற்கு பகீரத முயற்சியில் இறங்கியுள்ளனர். அதற்காக, தற்போது பணியில் உள்ளவர்கள் மீது, இல்லாத பல புகார்களை கூறி மொட்டை பெட்டிஷன்கள் போட்டு வருகின்றனர். அந்த புகார்களின் மீது, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தும்போது, அத்தனையும் பொய் என, தெரியவந்துள்ளது.இந்த தாலுகாவில், தற்போது அலுவலர்கள் நிம்மதியாக பணிபுரிந்து வரும் நிலையில், பழைய அதிகாரிகள் மீண்டும் பணிக்கு வந்தால் கரன்சியும், கெட்டப்பெயரும்தான் மிஞ்சும் என வருவாய்த்துறை அலுவலர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். ஆளுங்கட்சி வட்டார பலத்துடன் பழைய அதிகாரிகள் சிலர் முட்டி மோதுவதால், கலெக்டர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.