| ADDED : ஜூன் 08, 2024 05:40 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் மணிமுக்தாற்றில் படித்துறை சீரமைக்கப்பட்டதால், பொது மக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தன்று, மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ஐதீகம். இந்நாளில் லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் திதி கொடுத்து, சுவாமியை வழிபட்டு செல்வர். ஆனால், மணிமுக்தாறு படித்துறை பெயர்ந்து, பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது.விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் கோரிக்கையின்படி, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மாநில நிதியின் கீழ் 1.46 கோடி ரூபாயில் படித்துறையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்ச் முதல் வாரத்தில், பூமி பூஜையுடன் பணிகள் துவங்கியது.அதில், 80 மீட்டர் அகலத்திற்கு படித்துறையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. பருவ மழைக்கு முன்னதாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட பணிகள், முழு வீச்சில் முடிக்கப்பட்டது. தற்போது பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் தயாராக இருப்பதால் பொது மக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.