| ADDED : ஜூன் 26, 2024 01:39 AM
சிதம்பரம்,: தம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் ஆகிய இரு பெரும் தரிசன விழாக்கள் நடக்கிறது.இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன விழா, வரும் ஜூலை 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், கொடியேற்ற தினம் அன்று காலை 6:00 மணி முதல் 7.30 மணிக்குள் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில், உற்சவ ஆச்சாரியார் கிருஷ்ணசாமி தீட்சிதர் கொடி ஏற்றுகிறார். தினமும், காலை, மாலை என, இருவேளையும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.ஜூலை 4ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 7ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதியுலா (தெருவடைச்சான்) நடக்கிறது. 8ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 9ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 10ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடக்கிறது.முக்கிய விழாவான, தேரோட்டம், ஜூலை 11ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 8:00 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு ஏக கால லட்சார்ச்சனையும், 12ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு மகாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதியுலாவை தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.