| ADDED : ஜூலை 13, 2024 12:49 AM
நெய்வேலி: என்.எல்.சி., சார்பில் நெய்வேலியில் நடைபெறும் புத்தக கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11ல் உள்ள லிக்னைட் ஹாலில் இந்த ஆண்டுக்கான 23வது புத்தகக் கண்காட்சி கடந்த 5ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.கண்காட்சியில் இந்தியா முழுவதுமிருந்தும் 135 புத்தக வெளியீட்டு பதிப்பகங்கள் பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்களை 180 அரங்குகளில் பார்வைக்கு வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு புத்தகங்கள் விற்பனை மற்றும் விளையாட்டு சாதனங்கள் இருக்கக்கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்து செல்ல வசதியாக என்.எல்.சி., பஸ்கள் மூலம் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கண்காட்சியை பார்வையிட வரும் மாணவர்கள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கண்காட்சி 15ம் தேதி நிறைவடைகிறது. புத்தக கண்காட்சி குழுவின் தலைமை புரவலராக என்.எல்.சி.,சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, புரவலர்களாக இயக்குனர்கள் சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம், சுரேஷ் சந்திர சுமன், பிரசன்னகுமார் ஆச்சார்யயா மற்றும் என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் உள்ளனர்.என்.எல்.சி., செயல் இயக்குநர்கள் பிரபு கிஷோர், ஹேமந்த் குமார் தலைமையிலான அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.