என்.எல்.சி., சுரங்க பாதுகாப்பு வார நிறைவு விழா
நெய்வேலி, : நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11ல் உள்ள லிக்னைட் அரங்கில், நெய்வேலி மண்டல அளவிலான என்.எல்.சி., சுரங்கப் பாதுகாப்பு வாரம் -2024ன் நிறைவு நாள் விழா நடந்தது. என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார். சென்னை மண்டல சுரங்கப் பாதுகாப்பு துறை இயக்குனர் கண்ணன், குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். என்.எல்.சி., சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷ் சந்திர சுமன், மனிதவளத்துறை சமீர் ஸ்வரூப், மின்துறை இயக்குனர் வெங்கடாசலம், என்.எல்.சி., விஜிலென்ஸ் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் வரவேற்றார். சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், 'நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மிக உயர்ந்த நிலக்கரி உற்பத்தியை அடைந்தது, முதல் 5 அதிகபட்ச உற்பத்தித் திறன் கொண்ட நிலக்கரி சுரங்கங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள மச்சகட்டா (ஓடிசா) நிலக்கரி சுரங்கத்தை ஏலமுறையில் வென்ற துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது' என்றார்.லிக்னைட் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 16 மாதிரி அரங்குகளில் சிறந்த அரங்கிற்கு பரிசு வழங்கப்பட்டன. அதில் சுரங்கம்-1ன் டெலிகாம் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு முதல் பரிசையும், சுரங்கம்-2 ன் நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு பிரிவு இரண்டாம் பரிசையும், சுரங்கம்-1 கன்வேயர் பராமரிப்பு பிரிவு மூன்றாம் பரிசையும் வென்றன. மாதிரி அரங்கு கண்காட்சியில் பங்கேற்ற என்.எல்.சி., மருத்துவத்துறை மற்றும் நிறுவன தகவல் தொடர்பு துறை ஆகியவற்றிற்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.