| ADDED : ஜூலை 01, 2024 06:43 AM
கடலுார் : கடலுார் அண்ணா மேம்பாலத்தில் லாரி மோதி சேதமடைந்த இரும்பு தடுப்பு கம்பியை சீரமைப்பதில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டிய நிலையில், டிராபிக் போலீசார் பேரிகார்டு வைத்து சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.கடலுார் கெடிலம் ஆறு, அண்ணா மேம்பாலம் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து வடலுாருக்கு ஜல்லி கற்களை ஏற்றிச்சென்ற டிப்பர் லாரிஅண்ணா மேம்பாலம் தரைகாத்த காளியம்மன் கோவில் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதனால், பாலத்தின் ராட்சத இரும்பு தடுப்பு கம்பி சேதமடைந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இந்நிலையில், இந்த இரும்பு தடுப்பு கம்பியை அகற்றப்படவில்லை.இதனால், அப்பகுதியில் விபத்தை தடுக்க டிராபிக் போலீசார் பேரிகார்டுகள் வைத்து தற்காலிக தடுப்பு ஏற்படுத்தினர். இதையடுத்து, அங்கு நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில், நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டி வந்தனர்.இந்நிலையில், டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு நேற்று சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். அங்கு தடுப்பு சுவர் பகுதியில் பள்ளம் தோண்டி கான்கிரீட் போட்டு அதில் பேரிகார்டுகளைவைத்துள்ளனர்.எனவே, அப்பகுதியில் விபத்தை தடுக்க நிரந்தர தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினர் ராட்சத இரும்பு தடுப்பு அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.