| ADDED : ஜூன் 18, 2024 05:47 AM
கடலுார்: கடலுாரில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. ஹாக்கி அகாடமி மற்றும் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சார்பில், சண்முகசாமி நினைவு கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டி கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. கடலுார், புதுச்சேரி, சென்னை உட்பட 14 அணிகள் பங்கேற்றது. சென்னை சோசா ஹாக்கி கிளப் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. சென்னை வருமான வரித்துறை அணி 2வது இடம், கோவில்பட்டி அணி 3வது இடம், சென்னை செயின்ட் பால் அணி 4வது இடம் பிடித்தது.பரிசளிப்பு விழாவில், ஹாக்கி அகாடமி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மூத்த மேலாளர் ராஜா, அரிஸ்டோ பப்ளிக் பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் கருணாகரன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்கள் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநில திட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். விழாவில், பொருளாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராம்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.