| ADDED : ஜூலை 18, 2024 08:46 AM
பெண்ணாடம், : பெண்ணாடம் பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் குறுவை நெல் அறுவடை பணியை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், வடகரை, நந்திமங்கலம், மாளிகைக்கோட்டம், அரியராவி, கோனுார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல், கடந்த மார்ச் மாதத்தில் விவசாயிகள் குறுவை நெல் நடவு சாகுபடி செய்தனர்.பல கிராமங்களில் நெற்கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.அறுவடை பணிகளை விவசாயிகள் துவங்க இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் நனைந்தும், வயலில் சாய்ந்தும் சேதமடைந்துள்ளன.வயலில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால், இயந்திரம் மூலம் அறுவடை பணியை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.