| ADDED : ஜூன் 08, 2024 04:56 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குடிநீர் வராததை கண்டித்து, காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏறபட்டது.விருத்தாசலம் அருகே எருமனுார் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளின் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏரிக்கரை தெரு, ரோட்டு தெரு ஆகிய பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெகுதுாரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் விருத்தாசலம் - கோணாங்குப்பம் சாலையில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, குடிநீர் பிரச்னையை உடனே தீர்க்க வேண்டும், துாய்மையான குடிநீர் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். ஊராட்சி தலைவர் சவுமியா மற்றும் விருத்தாசலம் போலீசார், குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக கூறினர். அதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் பகல் 12:30 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.