| ADDED : ஆக 10, 2024 05:45 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில், கடலுார் மார்க்கத்தில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தநல்லுார் கிராமத்தில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். பொது மக்கள் நலன் கருதி 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் கூடுதலாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட அனுமதி பெறப்பட்டது. இதற்காக ஊராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான சர்வே எண்.5ல் இடம் தேர்வு செய்து, அங்கு கட்டுமான பணிகள் துவங்கிட முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்த தனிநபர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து விருத்தாசலம் தாசில்தாரிடம் கடந்த 7ம் தேதி கிராம மக்கள் மனு கொடுத்தனர். மேலும் பி.டி.ஓ.,விடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்து, வி.சாத்தமங்கலம் பஸ் நிறுத்தத்தில், பொது மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த தாசில்தார் உதயகுமார் அவர்களை சமாதானம் செய்தார். அப்போது, பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் சாலை மறியல் செய்வது தவறு. உங்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை யேற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், காலை 10:45 முதல், பகல் 11:30 மணி வரை கடலுார் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.