| ADDED : ஏப் 25, 2024 04:05 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில், கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில், கடந்த 2 வாரமாக ஆண்டு தணிக்கை நடைபெற்றது. இந்த தணிக்கை அறிக்கையை மேலாய்வு செய்து அதன் அறிக்கையை அனுப்ப நேற்று கடலுாரில் இருந்து உள்ளூர் தணிக்கை குழு உதவி இயக்குனர் பூங்குழலி, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் பேரூராட்சி அலுவலகம் சென்றனர்.இந்நிலையில், பேரூராட்சி தணிக்கை குழு அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், தணிக்கை குழுவினருக்கு லஞ்சம் கொடுக்க இருப்பதாக புகார் எழுந்தது.அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையில் அதிகாரிகள், மாவட்ட துணை ஆய்வுக்குழு இன்ஸ்பெக்டர் சுபத்ரா ஆகியோர் நேற்று மாலை 4:00 மணிக்கு, பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அதில், , பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து செயல் அலுவலர் சீனிவாசன், தணிக்கை குழு உதவி இயக்குனர் பூங்குழலி, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோரிடம், இரவு 9;30 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர் முக்கிய ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடலுார் புறப்பட்டு சென்றனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் நடந்த 'விஜிலென்ஸ் ரெய்டால்' பரபரப்பு நிலவியது.