| ADDED : ஆக 06, 2024 07:18 AM
கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில் கைதி பிறந்த நாள் கொண்டாடிய விவகாரத்தில் மேலும் ஒரு போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடலுார் அடுத்த பில்லாலி தொட்டியைச் சேர்ந்த மணி மகன் சூர்யா,26; எய்தனுார் ஜெயமூர்த்தி மகன் விக்னேஷ்,26; இவர்கள் கடந்த 25ம் தேதி கம்மியம்பேட்டையில் தி.மு.க., பிரமுகரை கத்தியால் வெட்டிய வழக்கில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.முன்னதாக, சூர்யா தப்பியோட முயன்ற போது, கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதையொட்டி, அவருக்கு கடலுார் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், சூர்யா கடந்த 1ம் தேதி தனது பிறந்த நாளை மருத்துவமனையில் தனது மனைவி பிரீத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.அதனையொட்டி பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் சாந்தகுமார், ஆயுதப்படை போலீஸ்காரர் வேல்முருகன் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி.,ராஜாராம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில் மேலும் ஒரு ஆயுதப்படை போலீஸ்காரர் கவியரசன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.