ஊராட்சி தலைவரை போலீஸ் விடுவிக்க கோரி சாலை மறியல் பண்ருட்டி அருகே போக்குவரத்து பாதிப்பு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற ஊராட்சி தலைவரை விடுவிக்க கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர், நேற்று காலை சிறுவத்துார் ஏரியில் மண் அள்ளும் இடத்திற்கு சென்று, அங்கு வண்டல் மண் அள்ளுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என, கேட்டுள்ளார். அப்போது அங்குவந்த சிறுவத்துார் ஊராட்சி தலைவரும், ஜெ.பேரவை மாவட்ட துணை செயலாளருமான முருகனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், ஊராட்சி தலைவர் முருகனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.இதையறிந்த ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் 150க்கும் மேற்பட்டோர், ஊராட்சி தலைவரை விடுவிக்க வலியுறுத்தி அங்குசெட்டிப்பாளையம் மெயின்ரோட்டில் மாலை 5:45 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி.,ராஜா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, ஊராட்சி தலைவர் மீது தவறு இல்லையெனில் விடுவிப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, 6:30 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால், அந்த வழியாக 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.