| ADDED : ஏப் 18, 2024 11:23 PM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்காததால், அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து, கருப்பு கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் ஊராட்சி, சேமக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் எஸ்.ஏரிப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த இரு ஊராட்சிகளில் ஏரிப்பாளையம் பகுதிமக்கள் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி, ஓராண்டுக்கு மேலாக போராடி வருகின்றனர்.சமீபத்தில் போராட்டம் நடத்தியவர்கள், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதுகுறித்து தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் தனி ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் மாற்றப்படவில்லை.இந்நிலையில் லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு திட்டமிட்டப்படி நடைபெறும் என நேற்று முன்தினம் அறிவித்தனர். அதையடுத்து நேற்று பூத் சிலிப் வழங்க கிராமத்திற்கு வந்தத தேர்தல் அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். மேலும், தேர்தல் புறக்கணிப்பதாக கூறி, கருப்பு கொடியுடன் நேற்ற மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பண்ருட்டி டி.எஸ்.பி., பழனி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு வரையில் தீர்வு ஏற்படவில்லை. இதனால், கண்டிப்பாக தேர்தல் புறக்கணிப்போம் என, கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.