| ADDED : மே 21, 2024 05:18 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே, எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து சுமை துாக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் - விருத்தாசலம் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையில், சாத்துக்கூடல் கருங்குழி ஓடை பாலத்தின் கீழ் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல்கிடைத்தது.போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாணையில் இறந்து கிடந்தவர் அரியலுார் மாவட்டம், பெரிய பட்டாக்காடு கிராமத்தை சேர்ந்த கருப்பையன் மகன் சதீஷ்குமார், 35, என்பதும், சென்னை, கொத்தவால் சாவடி மார்க்கெட்டில் சுமை துாக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்வது தெரிந்தது.நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு வர சென்னையில் இருந்து துாத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், செங்கல்பட்டில் இருந்து அரியலூர் வரை டிக்கெட் எடுத்து பயணித்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 12:00 மணியளவில் சாத்துக்கூடல் கருங்குழி ஓடை பகுதியில் எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.புகாரின்பேரில், விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.