| ADDED : ஜூலை 14, 2024 06:30 AM
புவனகிரி : கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர், புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.புவனகிரி அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் மோகன் மகன் மாமலைவாசன்,27; ஜே.சி.பி., டிரைவரான இவர், திட்டக்குடி அடுத்த தாழைநல்லுாரை சேர்ந்த அபிநயா,18; என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அபிநயா கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி இரவு ரத்த வாந்தி எடுத்து இறந்தார்.இதுகுறித்து புவனகிரி போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனையில் அபிநயா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்த போலீசார், ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடந்த மார்ச் 22ம் தேதி மாமலைவாசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.நேற்று முனதினம் ஜாமினில் வந்த மாமலைவாசன், புவனகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தனது மனைவியின் போட்டோ மற்றும் மொபைல் போனை கேட்டு தகராறு செய்தார். போலீசார் தரமறுத்து, அவரை விரட்டினர். ஆத்திரமடைந்த மாமலைவாசன் பிளேடால் உடலில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.அதிர்ச்சியடைந்த போலீசார், மாமலைவாசனை பிடித்து புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.