உடன்பிறப்பு கட்சியில் கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சம்
நெல்லிக்குப்பம் தி.மு.க.,வில், நகர செயலாளர் மணிவண்ணன், நகராட்சி சேர்மன் ஜெயந்தியின் கணவரும், பொதுக்குழு உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்படுகின்றனர். ஒரு கூட்டத்தில் அமைச்சர் கணேசன் முன்னிலையிலேயே இரு கோஷ்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அமைச்சர் சமாதானம் செய்ய முயன்று, முடியாமல் திரும்பினார்.ஆனால், கடந்த ஒரு மாதமாக சேர்மன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் மணிவண்ணனும் தலைகாட்டியதால், இரு கோஷ்டிகளும் சமாதானம் ஆகிவிட்டதாக, கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் கோஷ்டி பூசல் முடிவுக்கு வரவில்லை என்பது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கிய அன்று வெட்ட வெளிச்சமாகியது. உதயநிதி பதவியேற்றதை சேர்மன் ஜெயந்தி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக வந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதேபோல் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தின் முன் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.