| ADDED : நவ 21, 2025 07:09 AM
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில், மூதாட்டியிடம் நுாதன முறையில் நகை, பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் அடுத்த வெள்ளக்கரையை சேர்ந்தவர் காமாட்சி,70; இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக நேற்று காலை கடலுார் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டிக்கு உதவி செய்வதுபோல் உடன் சென்றார். மூதாட்டியை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் எனக்கூறியதாக தெரிகிறது. இதையடுத்து எக்ஸ்ரே எடுக்கும் அறைக்கு மூதாட்டியை அழைத்துச்சென்ற மர்ம நபர், எக்ஸ்ரே எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி அவரது காதிலிருந்த அரை சவரன் தோடு மற்றும் கையில் இருந்த 250ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டார். எக்ஸ்ரே அறையின் வெளியே காத்திருப்பதாக கூறிச்சென்ற மர்ம நபர் அங்கிருந்த எஸ்கேப் ஆனார். எக்ஸ்ரே எடுத்துவிட்டு மூதாட்டி மீண்டும் வந்து பார்த்தபோது, அந்த நபரை காணாமல் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தார். அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காமாட்சி கதறி அழுதார். தகவலறிந்த புதுநகர் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அரசு மருத்துவமனை வளாகத்தில் இதுபோல ஏற்கனவே மொபைல்போன், பைக் உள்ளிட்டவை திருடுபோன சம்பவங்கள் நடந்துள்ளது. போலீசார் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.