உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க... நடவடிக்கை; 20 பள்ளிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க... நடவடிக்கை; 20 பள்ளிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு

கடலுார்: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கல்வித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கடலுார் மாவட்டத்தில், மொத்தம் 116 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முதன்மைக் கல்வி அலுவலகம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் பாட வாரியாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் தொடர்பாக பள்ளி வாரியாக கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், கடலுார், பாலுார், புதுப்பேட்டை, விருத்தாசலம், பேர்பெரியாங்குப்பம் உட்பட 20 பள்ளிகளில் 3,000 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சரியாக வராதது, காலாண்டு தேர்வு எழுதாதது, ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெறாதது தெரியவந்தது. இதையடுத்து 20 பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, தலா 2 பேர் வீதம் மொத்தம் 40 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். இக்குழுவினர், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறாததற்கு காரணம், பள்ளிக்கு சரியாக வராததற்கான காரணம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரித்தனர். அதில், படிப்பில் போதிய ஆர்வமின்மை, உடல் சார்ந்த பிரச்னைகள் காரணமாக பள்ளிக்கு சரியாக வராததும், தேர்வில் தேர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' 2024-25ம் கல்வியாண்டில் கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிளஸ் 2 வகுப்பிற்கான காலாண்டு தேர்வில் 3,000 மாணவ, மாணவிகள் ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெறாததும், பள்ளிக்கு சரியாக வராததும் தெரிந்தது.உடல் சார்ந்த பிரச்னைகளால் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு மருத்துவத் துறை மூலமாக ஆலோசனை வழங்கவும், படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !