மேலும் செய்திகள்
சமயசங்கிலி ஆற்றில் பரிசலில் மணல் கடத்தல்
25-Feb-2025
புவனகிரி தாலுகாவிற்குட்பட்ட கொத்தட்டை, அத்தியாநல்லுார், பெரியப்பட்டு, சிலம்பிமங்களம் உள்ளிட்ட பல கிராமங்களில் சவுடு மணல் குவாரிகள் இயங்கின. ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறி அதிக மண் எடுத்த பிரச்னை விஸ்வரூபமாகி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே விதிமுறை மீறி செயல்பட்ட மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதும், அதன் பின், மீண்டும் செயல்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில், தற்போது அத்தியாநல்லுார், கொத்தட்டை, பெரியப்பட்டு பகுதிகளில் சவுடு மணல் குவாரி தற்போது செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த வாரத்தில், அத்தியாநல்லுார் குவாரியில் அளவுக்கதிகமாக மணல் எடுப்பதை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அதனால், அன்று மூடப்பட்ட குவாரி அடுத்த நாளே செயல்பட துவங்கியது. ஆத்திமடைந்த கிராம மக்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் கனிமவளம், வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பணம் கொழித்த மணல் குவாரி திடீரென நின்று போனதால் குவாரி உரிமையாளர் மட்டுமன்றி, அதனால் பயனடைந்த அதிகாரிகளும் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.இந்நிலையில், மணல் குவாரியில் சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் வெளிச்சமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு, வெளிச்சம் இருந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது சுடுகாடு அருகே அகோரி ஒருவர் அர்த்தசாம பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.கிராம மக்கள், அகோரியை பிடித்து விசாரித்தபோது, பதில் ஏதும் சொல்லாமல் மவுனம் காத்தார். ஆத்திரமடைந்த கிராம மக்கள், அகோரியை விரட்டியடித்தனர். மணல் குவாரியை மீண்டும் திறந்து நடத்துவதற்காக அகோரியை கொண்டு அர்த்தசாம பூஜை நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25-Feb-2025