உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களை ஏமாற்றவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம்

மக்களை ஏமாற்றவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம்

காட்டுமன்னார்கோவில்: 2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, 'மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம்' என்ற தலைப்பில் காட்டுமன்னார்கோவிலில் உடையார்குடி சாலையில் இருந்து, வேன் மூலம் சாலையின் இருபுறமும், காத்திருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து ரோடு ேஷா சென்றார். காட்டுமன்னார்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை துவக்கியுள்ளார். 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே மக்களை ஏமாற்ற இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் வருவாய் துறை சார்பில் மக்களை தேடி வருவாய்த்துறை என்ற திட்டம் செயல்படுத்தினோம். இத்திட்டத்தையே 'உங்களுடன் ஸ்டாலின்' என்று மாற்றி செயல்படுத்தி வருகிறார். தேர்தல் அறிக்கையில் 525 வாக்குறுதிகளை கூறினார். ஆனால் 10 சதவீதம் கூட செயல்படுத்தவில்லை. ஸ்டாலின் ஆட்சியில் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் மூன்றும் அதிகமாக உள்ளது. 10 ரூபாய்க்கு மதிப்பே இல்லாமல் இருந்தது. ஆனால் செந்தில்பாலாஜி வந்த பிறகு 10 ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக 2, 818 மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்துள்ளனர்.மிசா சட்டம், எமர்ஜென்சி கொண்டு வந்த காங்., கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க., மற்ற கட்சிகளின் கூட்டணி பற்றி பேசலாமா. அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணியில் விரைவில் பிரம்மாண்டமான கட்சி சேரும். 2026 தேர்தலில் அ.தி.மு.க., பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி மன்னராட்சி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் இப்பகுதிக்கு எந்த நலத்திட்டங்களும் வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாண்டியன், அமைப்பு செயலாளர் முருகுமாறன், ஒன்றிய செயலாளர் வாசு முருகையன், சிவக்குமார், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ