பதவிக் காலம் முடிந்த ஊராட்சிகளில் சிறப்பு அலுவலர்கள் நியமனம்
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க., ஊராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 29, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 287, கிராம ஊராட்சித் தலைவர்கள் 683, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 5,040 என மொத்தம் 6,039 உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது.மாவட்ட ஊராட்சிக்கு கூடுதல் கலெக்டர் சரண்யா, ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊராட்சி உதவி இயக்குனர்கள் ஷபானா அஞ்சும், முருகன், கிராம ஊராட்சிகளுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.